Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய அரசுடன் 29-ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் சம்மதம்

மத்திய அரசுடன் 29-ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் சம்மதம்

By: Karunakaran Sun, 27 Dec 2020 1:02:47 PM

மத்திய அரசுடன் 29-ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் சம்மதம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் ஒரு மாதத்தை கடந்து விட்டது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 சுற்று பேச்சுவார்த்தைகள் எந்தவித பலனையும் தரவில்லை. எனினும் வேளாண் சட்ட பிரச்சினையில் சுமுக முடிவு காண்பதில் உறுதியாக இருக்கும் மத்திய அரசு, விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து விவசாயிகள் நீண்ட ஆலோசனையிலும் ஈடுபட்டு வந்தனர். இது நேற்றும் நீடித்தது. குறிப்பாக 40 விவசாய அமைப்புகள் இணைந்த கூட்டு அமைப்பான சன்யுக்த் கிசான் மோர்ச்சாவின் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி மத்திய வேளாண் துறை செயலாளர் விவேக் அகர்வாலுக்கு விவசாயிகள் கடிதம் அனுப்பினர்.

farmers,central government,delhi,farmers struggle ,விவசாயிகள், மத்திய அரசு, டெல்ஹி, விவசாயிகள் போராட்டம்

அதில், மத்திய அரசு மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இடையிலான பேச்சுவார்த்தையை 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு வைத்துக்கொள்ளலாம் என குறிப்பிட்டு இருந்தனர். இதுகுறித்து பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் மூத்த தலைவர் திகெயித் கூறுகையில், மத்திய அரசு எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு விரும்பிய நிலையில், அதற்கான தேதி மற்றும் நேரத்தை நாங்கள் தேர்வு செய்து அறிவிக்க கூறியிருந்ததன்பேரில், வருகிற 29-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் சம்மதித்து இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து வருகிற 30-ந்தேதி குண்ட்லி-மானேசர்-பல்வால் 6 வழிச்சாலையில் விவசாயிகள் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்தவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். போராட்டத்துக்காக செல்லும் இந்த விவசாயிகள் ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் கொண்டு செல்கின்றனர். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏராளமான இளைஞர்களும் களத்தில் குதித்து உள்ளனர். தங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்க விவசாயிகள் சம்மதித்து இருக்கும் நிலையில், இதற்கு அரசின் பதில் என்ன? என்பது பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
|