Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிப்ரவரி மாதத்தில் மதுரவாயல்-துறைமுகம் மேம்பால பணிகளை துவக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்பாடு

பிப்ரவரி மாதத்தில் மதுரவாயல்-துறைமுகம் மேம்பால பணிகளை துவக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்பாடு

By: Monisha Fri, 11 Dec 2020 3:57:26 PM

பிப்ரவரி மாதத்தில் மதுரவாயல்-துறைமுகம் மேம்பால பணிகளை துவக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்பாடு

ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு வரும் வாகனங்கள் தற்போது மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு இடையே வந்து செல்கின்றன. இந்த நெரிசலுக்கு தீர்வு காண மதுரவாயலில் இருந்து துறைமுகம் செல்வதற்காக புதிய உயர்மட்ட சாலை அமைக்க தி.மு.க. ஆட்சியின் போது முடிவு செய்யப்பட்டது. சென்னை பறக்கும் சாலை திட்டம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்த மேம்பாலத்திற்கு 2007-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் அடிக்கல் நாட்டினார்.

ரூ.1,815 கோடி மதிப்பீட்டில் மேம்பாலத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக கூவத்தின் ஓரமாக தூண்கள் அமைக்கப்பட்டது. 2011-ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு பதவிக்கு வந்ததும் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. கூவத்தில் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளதால், நீரோட்டம் தடைபடும் என்று காரணம் கூறப்பட்டது.

flyover,construction,study,national highway,transport ,மேம்பாலம்,கட்டுமானம்,ஆய்வு,தேசிய நெடுஞ்சாலை,போக்குவரத்து

இதனால் பல ஆண்டுகளாக பணிகள் நடைபெறாததால், தூண்கள் மட்டுமே மொட்டையாக நிற்கின்றன. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து 2017-ல் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு இந்த பாலத்தை கட்ட மீண்டும் முயற்சிகள் மேற்கொண்டார். இதற்காக மத்திய மந்திரி நிதின் கட்கரியை சந்தித்து பாலம் கட்டுமானம் குறித்து விரிவாக எடுத்து கூறினார்.

இதைத்தொடர்ந்து மீண்டும் மேம்பாலம் அமைக்க நடவடிக்கைகள் தொடங்கின. இதையடுத்து மேம்பால சாலையை வானகரம் வரை 800 மீட்டரும், நேப்பியர் பாலத்தில் இருந்து கடற்படை அதிகாரிகள் குடியிருப்பு வரை 350 மீட்டரும் நீட்டித்து திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. திட்ட மதிப்பீடு தொகையும் ரூ. 3,204 கோடியாக உயர்த்தப்பட்டது.

இந்த திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகளின் அனுமதியும் கிடைத்தது. சமீபத்தில் சென்னை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மதுரவாயல் மேம்பாலம், இரண்டு அடுக்கு மேம்பாலமாக மாற்றப்படும் என்றும் தெரிவித்தார். இதற்கான சாத்திய கூறுகளை தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த திட்டத்தில் சில இடங்களில் வாகனங்கள் இறங்குவதற்கும், ஏறுவதற்கும் ஏற்ற வகையில் பாலங்களை கட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வருகிற பிப்ரவரி மாதம் மேம்பால பணிகளை துவக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

Tags :
|