Advertisement

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 11 அடி உயர்வு

By: Monisha Mon, 10 Aug 2020 09:13:59 AM

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 11 அடி உயர்வு

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 11 அடி உயர்ந்து 86.91 அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகளான கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை வந்தடைகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் தமிழக-கர்நாடக எல்லையான அடிபாலாறு பகுதியில் இருகரைகளையும் தொட்டப்படி காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து மேட்டூர் அணையை நோக்கி ஓடுகிறது.

நேற்று காலை வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகமானது. நேற்று மாலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. தொடர்ந்து இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

mettur dam,rain,cauvery,flood,irrigation ,மேட்டூர் அணை,மழை,காவிரி,வெள்ளம்,பாசனம்

அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 75.85 அடியாக இருந்தது. இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 11 அடி உயர்ந்து 86.91 அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாகவும், நீர்இருப்பு 49.1 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Tags :
|
|