Advertisement

அதிரடி காட்டி 169 ரன்கள் குவித்தது பெங்களூரு அணி

By: Nagaraj Sat, 10 Oct 2020 10:25:18 PM

அதிரடி காட்டி 169 ரன்கள் குவித்தது பெங்களூரு அணி

169 ரன்கள் குவித்த பெங்களூரு அணி... சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 25-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக தேவ்தத் படிக்கல் மற்றும் ஆரோன் பின்ச் களமிறங்கினர். பின்ச் முதல் பந்திலிருந்தே ஸ்விங் பந்தை எதிர்கொள்ள திணறி வந்தார். விளைவு தீபக் சஹார் வீசிய 3-வது ஓவரில் 2 ரன்களுக்கு போல்டானார்.

இதையடுத்து, படிக்கல்லுடன் கோலி இணைந்தார். பந்து ஸ்விங் ஆனதால் இருவராலும் துரிதமாக ரன் சேர்க்க முடியவில்லை. இதனால், பவர் பிளே முடிவில் பெங்களூரு அணி 36 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பவர் பிளேவுக்குப் பிறகும் பெரிதளவு பவுண்டரிகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், 10-வது ஓவரை வீச ஷர்துல் தாக்குரை அழைத்தார் தோனி. 2-வது பந்தில் படிக்கல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் தாக்குர். படிக்கல் 34 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அதேஓவரில் டி வில்லியர்ஸ் (0) விக்கெட்டையும் வீழ்த்த பெங்களூரு அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. இதையடுத்து, வாஷிங்டன் சுந்தர் முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். அவர் 10 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து சாம் கரண் பந்தில் ஆட்டமிழந்தார்.

rankuvippu,virat kohli,chennai team,169 runs ,ரன்குவிப்பு, விராட் கோலி, சென்னை அணி, 169 ரன்கள்

விக்கெட்டுகள் சரிந்தபோதிலும், கோலி விக்கெட்டைப் பாதுகாத்து சென்னைக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தார். கோலியுடன் துபே இணைந்தார். 17-வது ஓவரிலிருந்து ஆட்டம் அதிரடிக்கு மாறியது. தாக்குர் வீசிய 17-வது ஓவரில் துபே மற்றும் கோலி தலா 1 பவுண்டரி அடிக்க 14 ரன்கள் கிடைத்தன. அதேசமயம் கோலியும் இதன்மூலம் தனது அரைசதத்தைக் கடந்தார்.

18-வது ஓவரை சாம் கரண் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை துபே சிக்ஸருக்கு அடித்தார். ஜெகதீசன் அதைப் பிடிக்க தவற அது சிக்ஸராகவே மாறியது. கோலியும் தன் பங்குக்கு 2 சிக்ஸர்கள் அடிக்க அந்த ஓவரில் மட்டும் 24 ரன்கள் கிடைத்தன.

ஷர்துல் தாக்குர் வீசிய 19-வது ஓவரில் முதல் பந்திலேயே கோலி சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்து நோ பாலாக வீச மற்றொரு பெரிய ஓவராக மாறவிருந்தது. ஆனால், அந்த ஓவரில் அதன்பிறகு பவுண்டரிகள் கிடைக்கவில்லை. இதனால், அந்த ஓவரில் 14 ரன்கள் எடுக்கப்பட்டது.

கடைசி ஓவரை பிராவோ வீசினார். முதல் பந்தை டி வில்லியர்ஸ் பாணியில் பவுண்டரி அடித்தார் கோலி. அடுத்த 4 பந்துகளில் பவுண்டரிகள் கிடைக்காத போதிலும் தொடர்ச்சியாக 4 முறை 2 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் 1 ரன் எடுக்க அந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தன. கடைசி 5 ஓவர்களில் மட்டும் பெங்களூரு 74 ரன்கள் குவித்தது.

இதன்மூலம், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. கோலி 52 பந்துகளில் 90 ரன்களுடனும், துபே 14 பந்துகளில் 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Tags :