Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ராஜஸ்தானை வெளியேற்றி பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்ட கொல்கத்தா அணி

ராஜஸ்தானை வெளியேற்றி பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்ட கொல்கத்தா அணி

By: Nagaraj Mon, 02 Nov 2020 08:45:54 AM

ராஜஸ்தானை வெளியேற்றி பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்ட கொல்கத்தா அணி

ராஜஸ்தானை வெளியேற்றியது... ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தானை வெளியேற்றி கொல்கத்தா அணி ‘பிளே-ஆப்’ வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று (நவம்பர் 1) இரவு 7.30 மணிக்கு துபாயில் நடந்த 54ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதின. கொல்கத்தா அணியில் இரண்டு மாற்றங்களாக லோக்கி பெர்குசன், ரிங்கு சிங் நீக்கப்பட்டு ஆந்த்ரே ரஸ்செல், ஷிவம் மாவி சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் சுமித்முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய அழைத்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய கொல்கத்தா அணி இரண்டாவது பந்திலேயே விக்கெட்டை இழந்தது. நிதிஷ் ராணா (0) ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் சுப்மான் கில்லும், ராகுல் திரிபாதியும் இணைந்து அணியைச் சரிவில் இருந்து மீட்டனர்.

ஸ்கோர் 73 ரன்களை எட்டியபோது சுப்மான் கில் 36 ரன்களில் (24 பந்து, 6 பவுண்டரி) கேட்ச் ஆனார். மூன்றாவது விக்கெட்டுக்கு வந்த சுனில் நரின் (0), திரிபாதி (39 ரன், 34 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), தினேஷ் கார்த்திக் (0) அடுத்தடுத்து வெளியேற கொல்கத்தா தடுமாற்றத்துக்குள்ளானது.

இதன் பின்னர் கேப்டன் இயான் மோர்கனும், ஆந்த்ரே ரஸ்செல்லும் அணியை சிக்கலில் இருந்து மீட்டனர். சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபாலின் ஒரே ஓவரில் மோர்கன் 2 பவுண்டரி, 2 சிக்சர் நொறுக்கினார். சிறிது நேரமே நின்றாலும் ரஸ்செல் (25 ரன், 11 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) பந்தைப் பறக்கவிட்டார். பென் ஸ்டோக்ஸின் ஒரு ஓவரில் மோர்கனும், கம்மின்ஸும் இணைந்து மூன்று சிக்சரும், ஒரு பவுண்டரியும் பறக்க விட்டனர்.

rajasthan team,missed opportunity,kolkata,ipl,play-off ,ராஜஸ்தான் அணி, வாய்ப்பு இழந்தது, கொல்கத்தா, ஐ.பி.எல், பிளே ஆப்

ராஜஸ்தான் பவுலர்களை கடைசி வரை துவம்சம் செய்த மோர்கன் சவாலான ஸ்கோரை அடைவதற்கு வித்திட்டார். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. மோர்கன் 68 ரன்களுடன் (35 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்) களத்தில் இருந்தார்.

அடுத்து 192 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி சிக்சருடன் ரன் கணக்கை அட்டகாசமாகத் தொடங்கியது. ஆனால் அதிரடி காட்ட வேண்டிய அழுத்தத்தில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. உத்தப்பா (6 ரன்), பென் ஸ்டோக்ஸ் (18 ரன்), கேப்டன் ஸ்டீவன் சுமித் (4 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வரிசையாக எடுத்தார்.

இதில் ஸ்டோக்ஸ் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பாய்ந்து ஒற்றைக்கையால் பிடித்து சிலிர்க்க வைத்தார். சஞ்சு சாம்சனும் (1 ரன்) நிலைக்கவில்லை. இதனால் ராஜஸ்தான் அணியால் நிமிர முடியாமல் போய் விட்டது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 35 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. கொல்கத்தா தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, ஷிவம் மாவி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் கொல்கத்தா அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் பிளே-ஆப் வாய்ப்பிலும் நீடிக்கிறது. எட்டாவது தோல்வியை தழுவிய ராஜஸ்தான் அணி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

Tags :
|