கெயில் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 80 சதவீதம் சரிவு

சரிவை சந்தித்துள்ளது... மத்திய அரசுக்குச் சொந்தமான கெயில் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 80 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோ கெமிக்கல் சந்தைப்படுத்துதலில் ஏற்பட்ட இழப்பையடுத்து நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 80 சதவீதம் சரிவடைந்து ரூ.255.51 கோடியானது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் ரூ.1,287.53 கோடியாக அதிகரித்திருந்தது.

அதேபோன்று கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் இயற்கை எரிவாயு சந்தைப்படுத்துதலில் வரிக்கு முந்தைய லாபமாக நிறுவனம் ரூ.850.48 கோடியை ஈட்டியிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் வரிக்கு முந்தைய நிலையில் ஏற்பட்ட இழப்பு ரூ.545.56 கோடியாக இருந்தது. மேலும், இயற்கை எரிவாயு சந்தைப்படுத்துதலில் நிறுவனம் ஈட்டிய வருவாயும் 39 சதவீதம் ரூ.9,443.72 கோடியானது.

இதற்கு, கொரோனா பொதுமுடக்கத்தால் ஆலைகளின் இயற்கை எரிவாயு பயன்படாடு பெருமளவில் குறைந்துபோனதே முக்கிய காரணம். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வருமானம் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.18,311.46 கோடியிலிருந்து குறைந்து ரூ.12,087.46 கோடியானது.

கெயில் குழுமத்தின் ஒட்டுமொத்த விற்றுமுதல் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.12,180.62 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டில் ரூ.18,481.56 கோடியாக அதிகரித்திருந்தது. இதே காலகட்டத்தில், குழுமத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1,503.67 கோடியிலிருந்து சரிந்து ரூ.642.97 கோடியானது என கெயில் தெரிவித்துள்ளது.