தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்; ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 536-க்கு விற்பனை

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த மாதம் 24-ந்தேதி ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆனது. கடந்த 1-ந்தேதி பவுனுக்கு ரூ.424 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 472 ஆக உயர்ந்தது. அதற்கு மறுநாளில் இருந்து விலையில் மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.38 மட்டும் உயர்ந்தது.

இந்த நிலையில் நேற்று திடீரென்று தங்கம் விலை எகிறியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 626-க்கும், ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 8-க்கும் விற்பனையானது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.66-ம், பவுனுக்கு ரூ.528-ம் உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 692-க்கும், ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 536-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த உயர்வு மூலம் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.

இதையடுத்து இன்று மேலும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.37,744க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 55 ரூபாய் 50 காசுக்கும், ஒரு கிலோ ரூ.55 ஆயிரத்து 500-க்கும் விற்பனை ஆனது.