பவள நகைகளை பல வருடங்கள் நம்முடனேயே இருக்க பராமரிப்பு முறைகள்

பவள நகைகளைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் எளிதான ஒன்றே. பவள நகைகளை சிறிது கவனத்துடன் சுத்தப்படுத்தி பராமரிப்பது அவசியமானதாகும். பவளம் இயற்கையாகவே மென்மையாக இருப்பதால் சிறிய உராய்வும் அதில் கீறலை ஏற்படுத்தி விடும். மேலும், சட்டென்று சேதமாகி உடையும் வாய்ப்பும் உள்ளது. பவளத்தை கவனத்துடன் பாதுகாத்துப் பராமரித்தால் அவை பல காலம் நீண்டு உழைக்கும் தன்மை கொண்டவையாகும். பவள நகைகளில் அழுக்கு படிந்திருந்தால் மென்மையான சோப்பினை துணி அல்லது மென்மையான பிரஷ்ஷை உபயோகப்படுத்தி அழுக்கை அகற்றலாம்.

மிகவும் கடினமான பிரஷ் மற்றும் துணி துவைக்கும் சோப்பைக் கொண்டு சுத்தப்படுத்தக்கூடாது. அவை, பவள நகைகளுக்கு சேதத்தை ஏற்படுத்தி விடும். பவள நகைகளைச் சுத்தப்படுத்த அதீத ஒலிச்சுத்தி (அல்ட்ராசானிக் கிளீனர்ஸ்) போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. ஆழமான அதிர்வுகள் பவளத்தில் சேதத்தை ஏற்படுத்துவதோடு பவளத்தை உடைத்து விடும் வாய்ப்பும் உள்ளது. நேரடியான சூரிய வெயில் மற்றும் அதிகப்படியான சூடினால் பவளமானது நிறம் மாறும் வாய்ப்புள்ளது. சில நேரங்களில் அதிகப்படியான சூடினால் அது முற்றிலுமாக நிறத்தை இழந்துவிடும்.

நாம் நிகழ்ச்சிகளுக்கு பவள நகைகளை அணிந்து வந்த பிறகு அவற்றை துவைத்து நன்றாக ஆறவைத்து அதில் சிறிதளவும் ஈரத்தன்மை இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு தனியான நகைப்பெட்டிகள் அல்லது மென்மையான துணியால் தைக்கப்பட்ட பைகளில் வைக்கவேண்டும். வேறு நகைகளுடன் பவள நகைகளை சேர்த்து வைத்தால் அவை பவள நகைகளுக்கு சேதத்தை ஏற்படுத்திவிடும். நாம் வெளியில் நிகழ்ச்சிகளுக்குக் கிளம்பும் பொழுது மொத்த அலங்காரத்தையும் முடித்த பிறகு கடைசியாக பவள நகைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

பவள நகைகளை அணிந்து கொண்டே நீச்சலடிப்பது, தோட்ட வேலைகளில் ஈடுபடுவது மற்றும் நடைப்பயணம் மேற்கொள்வது போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். பவளப் பாறைகள் என்பவை செடிகளால் உருவாக்கப்படுபவை அல்ல. கடல் விலங்குகளால் உருவாக்கப்படுபவையாகும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பவள நகைகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து நவரத்தின நகைகள் மற்றும் விலை உயர்ந்த நகைகளுக்கும் கடைபிடித்தோமானால் அவை பல வருடங்கள் நம்முடனேயே இருக்கும்.