சிறுமியை திருமணம் செய்தவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை; மகிளா கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் குமார் (வயது 23). இவர் கடந்த 2018-ம் ஆண்டு 16 வயது சிறுமி ஒருவரை திருமணம் முடித்து பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் போக்சோ சட்டம், குழந்தை திருமணம் தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் குமாரின் தந்தை கோபால், தாய் சரோஜா, அக்காள் திவ்யா, பெரியம்மா தனம் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் சிறையில் இருந்த குமார் ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை விசாரித்த மகிளா கோர்ட்டு நீதிபதி மலர்விழி தீர்ப்பு அளித்தார்.

சிறுமியை திருமணம் செய்த குமாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், கோபால், சரோஜா, திவ்யா, தனம் ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்தும் நீதிபதி மலர்விழி தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் வினோத்குமார் ஆஜராகி வாதாடினார். இதையடுத்து குமாரை போலீசார் கோர்ட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.