மகன் பிறந்த நாளுக்காக 1400 கி.மீ. ஸ்கூட்டரில் பயணம் செய்து வந்த தம்பதி

தம்பதியின் நெகிழ்ச்சி செயல்... மகனின் பிறந்தநாளை கொண்டாட மும்பையில் இருந்து 1400கிமீ ஸ்கூட்டரில் பயணம் செய்த தம்பதியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

புதுக்கோட்டை கோட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் மற்றும் இவரது மனைவி சங்கீதா என்ற தம்பதியருக்கு வேணி என்ற மகளும், யோகேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பெட்டிக்கடை நடத்தி வந்தனர் இந்த தம்பதி.

குழந்தைகளுக்கு கடந்த மார்ச் மாதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து செல்வம் தனது இரண்டு குழந்தைகளையும் கறம்பக்குடி அருகே பில்லக்குறிச்சியில் உள்ள அவர்களது தாத்தா வீட்டில் விட்டு சென்று விட்டு, செல்வம் மற்றும் அவரது மனைவி மும்பையிலேயே இருந்துள்ளனர்.

அதனையடுத்து, கொரோனா காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதை தொடர்ந்து தங்கள் குழந்தைகளை 8 மாதங்களுக்கு மேலாக காண இயலாமல் பெற்றோர்கள் தவித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இந்த தம்பதியரின் மகனான யோகேஸ்வரனுக்கு இன்று 28-ந் தேதி பிறந்தநாள் என்பதால் தங்களது குழந்தைகளை காண மும்பையில் இருந்து கடந்த 21-ந் தேதி அவர்களது சொந்த ஸ்கூட்டரில் புறப்பட்டு 23ந் தேதி இரவு கறம்பக்குடிக்கு வந்து சேர்ந்தனர்.

அதில், 1,400 கிலோ மீட்டருக்கு மேல் ஸ்கூட்டரில் பயணம் செய்து மகனின் பிறந்தநாளை கொண்டாட வந்த இந்த தம்பதியினருக்கு பாராட்டுகள் குவிந்து வருவதோடு, அவரது குழந்தைகள் 7 மாதத்திற்கு மேலாக பார்க்காத தங்கள் பெற்றோரை ஓடிவந்து கட்டித்தழுவியதும் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.