தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி வரைக்கும் உள்ள 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு

தென்காசி : தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவலின் வீதம் உயர்ந்து கொண்டே செல்கிறது. மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொது இடங்களுக்கு மாஸ்க் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு கொண்டு வருகிறது.

இதற்கு இடையியே, தற்போது குற்றால சீசன் என்பதால் பல ஊர்களில் இருந்தும் தென்காசிக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி போன்ற அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால், தென்காசி மாவட்டத்தில் கொரோனா பரவலும் உயர வாய்ப்பிருக்கிறது.

மேலும் தென்காசி மாவட்டத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒண்டிவீரன் வீர வணக்க நாள் நிகழ்ச்சி மற்றும் மாவீரன் புலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியும் ஆகஸ்ட் 20 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

எனவே தென்காசி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி மாலை 6 மணி வரைக்கும் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கூட்டம் கூடாமல் தனிமனித இடைவெளியுடன் நிகழ்ச்சியை கொண்டாடும்படியும் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.