மதுரையில் கொரோனாவுக்கு 15 வயது சிறுமி பலி

மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்த 15 வயது சிறுமி பலியானார்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 5 ஆயிரத்து 776 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 69 ஆயிரத்து 256 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 4 லட்சத்து 10 ஆயிரத்து 116 பேர் குணமடைந்துள்ளனர். 7 ஆயிரத்து 925 பேர் பலியாகி உள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் தென் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது.

மதுரையில் நேற்று புதிதாக 106 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 88 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 881 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் மதுரையில் நேற்று 45 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 36 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 468 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 1046 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இதுபோல், மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்த 15 வயது சிறுமியும் மூச்சுதிணறி பலியானார். இதன் மூலம் மதுரையில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது.