தஞ்சையில் 15 வயது சிறுமி கொரோனாவுக்கு பலி; டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் குறைப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,245 ஆக உள்ளது.

இந்நிலையில் தஞ்சையில் 15 வயது சிறுமி கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தஞ்சை மாநகராட்சி, கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. வரும் 31ந்தேதி வரை டாஸ்மாக் உள்பட அனைத்து கடைகளும் மாலை 4 மணி வரைதான் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக டாஸ்மாக் உள்ளிட்ட கடைகளின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.