அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்றுடன் நிறைவு பெறுகிறதா? இதுவரை 16 லட்சம் மாணவர்கள் சேர்க்கை

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது வரை 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி தொடங்கியது. மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் ஒரு வாரத்திலேயே 10 லட்சம் மாணவர்கள் சேர்ந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்தன.

இந்தநிலையில் தற்போது வரை 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதில் 1-ம் வகுப்பில் 3 லட்சத்து 8 ஆயிரம் பேரும், 6-ம் வகுப்பில் 3 லட்சத்து 66 ஆயிரம் பேரும், 9-ம் வகுப்பில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் பேரும், 11-ம் வகுப்பில் 4 லட்சத்து 14 ஆயிரம் பேரும் என 11 லட்சத்து 92 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். இதுதவிர பிற வகுப்புகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து இருக்கின்றனர்.

மாணவர் சேர்க்கை இன்றுடன் முடிவடைய இருப்பதாக கல்வித்துறை தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மாணவர் சேர்க்கை இன்றுடன் நிறைவு பெறுகிறதா? என்று அரசு அதிகாரிகள் தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.