சென்னை போலீசில் புதிதாக 16 பேர் கொரோனாவால் பாதிப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் முன்வரிசையில் நின்று பணியாற்றி வருகிறவர்கள் காவல் துறையினரே. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் பணியாற்றி வரும் காவல் துறையினர் பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.

சென்னை போலீசில் நேற்றுஒரு பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 16 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,128 ஆக உயர்ந்தது.

அதே நேரத்தில் நேற்று 14 போலீசார் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். குணம் அடைந்து பணிக்கு திரும்பிய போலீசாரின் எண்ணிக்கை 1,726 ஆக அதிகரித்தது.

மேலும், சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மொத்தம் 5 போலீசார் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை மேலும் ஒரு இன்ஸ்பெக்டர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அவர் பெயர் ஜொனாதன் பிரான்சிஸ் (வயது 53). இவர் சென்னை அடையார் மருதம் வளாகத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார். சுகாதாரத்துறை அதிகாரிகள் வழிகாட்டுதல்படி ஜொனாதன் பிரான்சிஸ் உடல் அடக்க ஏற்பாடுகள் நடைபெற்றது. தற்போது சென்னை காவல்துறையில் கொரோனாவுக்கு 6 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.