சென்னையில் கொரோனாவுக்கு 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,51,820 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,02,310 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை 2,167 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் 80 ஆயிரத்து 961 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்றுவரை 1,318 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 7 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 2 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனையில் 2 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.