புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளில் 1.94 லட்சம் மாணவிகள் பயன் .. தமிழ்நாடு அரசு தெரிவிப்பு

சென்னை: பெண் கல்வியை போற்றும் வகையிலும், அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர் கல்வியை பயில்வதற்கு ஏதுவாகவும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதையடுத்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், ‘புதுமைப் பெண்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பெண்களுக்கு உயர்கல்வி அளிக்க வேண்டும், பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுக்கவும், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவவும், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை உயர்த்தி, பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய இத்திட்டம் உருவாக்கப்பட்டது. முதற்கட்டமாக இத்திட்டத்தில், 1,16,342 மாணவிகள் பயனடைந்தனர்.

இந்த நிலையில் அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.94 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. 2021-22 ஆம் கல்வியாண்டில் 1.12 லட்சம் பேரும், 2022 -23 கல்வி ஆண்டில் 81,149 பேரும் பயனடைந்து உள்ளனர்.