பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 2 பேர் கைது

புதுடில்லி: சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களால் தூண்டப்பட்டு இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தத் திட்டமிட்டு வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய சிலர் மும்பை வழியாக டெல்லி வருவதாக டெல்லி காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அவர்கள் சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து பாகிஸ்தான் செல்ல உள்ளனர் என்றும் அங்கு ஆயுத பயிற்சி பெற்று இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர் என்றும் டெல்லி காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இந்த் தகவலின் அடிப்படையில் டெல்லி காவல்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியது.

இச்சூழலில் டெல்லி செங்கோட்டையின் பின்புற சுற்றுச்சாலையில் சென்றுகொண்டிருந்த இருவரிடம் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். அவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்துல்லா என்ற அப்துல் ரகுமான் (26). மற்றொருவர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த காலித் முபாரக் கான் (21).

இவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தூண்டப்பட்டு, இருவரும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தத் திட்டமிட்டு வந்துள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து ஆயுத பயிற்சி பெற ஆயத்தமாக இருந்துள்ளனர்.

இருவரிடமும் நடத்திய விசாரணையின்போது 2 கைத்துப்பாக்கிகள், 10 துப்பாக்கி குண்டுகள், ஒரு கத்தி, கம்பியை துண்டிக்கும் கருவி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று டெல்லி காவல்துறை கூறுகிறது.

இவர்கள் இருவர் மீதும் ஆயுத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் டெல்லி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.