கூலிப்படையை வைத்து கணவரை கொன்ற 2-வது மனைவி - திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் மனைவிக்கு துரோகம் செய்து வெளிநாட்டில் வேலைக்கு சென்ற இடத்தில் காதலித்து 2-வது திருமணம் செய்தவரை கூலிப்படையை வைத்து 2-வது மனைவி கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சையை சேர்ந்த யூசுப் என்பவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் அவர்கள் திருச்சியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் குவைத்துக்கு வேலைக்கு சென்ற யூசுப் அங்கு தன்னுடன் பணி செய்து கொண்டிருந்த அசிலா என்ற இலங்கைப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அந்த பெண்ணை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து தஞ்சாவூரில் ஒரு வீடு அமர்த்தி குடிவைத்தார். திருச்சி, தஞ்சை என இரண்டு மனைவிகளுடன் அவர் மாறி மாறி குடும்பம் நடத்தியதாக தெரிகிறது

இந்த நிலையில் தஞ்சையில் இருந்த இரண்டாவது மனைவி அசிலாவின் நடவடிக்கைகளில் சில மாறுதல் இருந்ததை யூசுப் கண்டுபிடித்தார். பேஸ்புக் மூலம் அவருக்கு பல இளைஞர்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அவர்களுடன் தகாத உறவு இருந்ததையும் கண்டுபிடித்தார்

இதனை அடுத்து அவர் கடந்த சில வருடங்களாக அசிலாவை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு யூசுப் மீண்டும் குவைத் சென்றிருந்த போது அவரது வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் வங்கி மேலாளரை தனது வலையில் வீழ்த்தி அசிலா எடுத்து விட்டதாகவும் யூசுப்பின் வங்கி லாக்கரில் இருந்த கோடிக்கணக்கான நகைகள் மற்றும் சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது

இந்த தகவலை அறிந்ததும் உடனடியாக இந்தியா வந்த யூசுப், இது குறித்து சட்ட நடவடிக்கை எடுத்தார். இந்த நடவடிக்கைகள் காரணமாக தனக்கு கிடைத்த கோடிக்கணக்கான சொத்துக்கள் பறிபோய் விடுமோ என்ற அச்சம் அசிலாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் பேஸ்புக்கில் அறிமுகமான நண்பர்களின் உதவியால் கூலிப்படையை வைத்து யூசுப்பை கொலை செய்துள்ளார்

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இரண்டாவது மனைவி அசிலா கூலிப்படையினர்களை ஏவி யூசுப்பை அடித்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் அவரை கைது செய்தனர். யூசூப்புக்கு தன்னை போலவே பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், தனக்கு பணம் கொடுத்து வந்ததை யூசுப் நிறுத்தியதால் அவரை கூலிப்படை வைத்து கொலை செய்ததாகவும் அசிலா வாக்குமூலம் அளித்துள்ளார்.