ஒரே குடும்பத்தில் 4 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள்

உத்தரப்பிரதேசம்: ஒரே குடும்பத்தில் 4 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ்... உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கார் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் சகோதர, சகோதரிகள் நான்கு பேர் யுபிஎஸ்சி தேர்வெழுதிய தற்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக இருக்கிறார்கள்.

அவர்களது தந்தை அனில் பிரகாஷ் மிஷ்ரா, கிராமிய வங்கியில் மேலாளராக இருக்கிறார். ஒரு கிராமிய வங்கி மேலாளராக இருந்தாலும் கூட, எனது பிள்ளைகளின் படிப்பில் என்றுமே சமரசம் செய்து கொண்டது இல்லை. அவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் எப்போதும் உறுதியாக இருந்தேன். அவர்களும் அதற்கேற்றார் போல நன்கு படித்தனர் என்கிறார்.

இவரது முதல் பிள்ளை யோகேஷ் மிஷ்ரா, நான்கு பிள்ளைகளில் மூத்தவர், தற்போது ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார். பொறியியல் படித்த இவர், 2013ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வெழுதி முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் ஆனவர்.

அவரது சகோதரி க்ஷாமா மிஷ்ரா, முதல் மூன்று முயற்சிகளில் தோல்வி அடைந்தாலும் விடா முயற்சியால் நான்காவது தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரியாகிவிட்டார். மூன்றாவது மகள் மாதுரி மிஷ்ரா, முதுகலைப் பட்டப்படிப்பு முடித்த இவர், 2014ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஜார்க்கண்ட் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

நான்காவது பிள்ளை மற்றும் கடைக்குட்டி லோகேஷ் மிஷ்ரா, தற்போது பீகார் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கிறார். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 44வது ரேங்கில் தேர்ச்சி பெற்றார். தங்களது பிள்ளைகள் நால்வரும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளாகிவிட்டது குறித்து பெருமிதத்தோடு கூறும் பெற்றோர், இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள்? எனது பிள்ளைகள் என் தலையை நிமிரச் செய்துள்ளனர் என்கிறார்.