சென்னையிலிருந்து உரிய அனுமதியின்றி திருச்சிக்கு வந்த 4 ஆயிரம் பேர்; மக்கள் அச்சம்

சென்னையிலிருந்து கடந்த 40 நாட்களில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உரிய அனுமதியின்றி திருச்சிக்கு வந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. வந்தவர்கள் எந்தெந்த பகுதிக்கு சென்றனர் என்று தெரியாததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்தியா அளவில் கொரோனா பாதிப்பு பட்டியலில் மீண்டும் 2வது இடத்திற்கு சென்றிருக்கிறது தமிழகம். சென்னையில் கொரோனா பரவலை தடுக்க கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் காரணமாகவே சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள 3 மாவட்டங்களில் முழு ஊரடங்கிற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு மற்றும் கொரோனா அச்சம் காரணமாக சென்னைவாசிகள் டூவீலர் மற்றும் கார்களில் வெளிமாவட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.

இதனை கட்டுப்படுத்த சென்னையைச் சுற்றி 288 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து போலீசார் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 40 நாட்களில் சென்னையில் இருந்து திருச்சிக்கு மட்டும் 4 ஆயிரம் பேர் எந்தவித அனுமதியும் இன்றி வந்துள்ள விபரம் தெரியவந்துள்ளது. இப்படி வந்தவர்கள் யார்? எந்தெந்த பகுதிகளுக்கு சென்றுள்ளனர் என்று தெரியாத நிலை உள்ளது.

இதனால் திருச்சி மக்கள் வெகு அச்சத்தில் உள்ளனர். இதேபோல் பிற மாவட்டங்களுக்கும் சென்னையிலிருந்து மக்கள் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் கொரோனா பரவல் அச்சம் அதிகரித்துள்ளது.