தமிழகத்தில் நேற்று முதல் 4,400 தனியார் பேருந்துகள் இயங்க தொடங்கியது!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக ஊரடங்கு ஜூன்30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் தளர்வு அளிக்கப்பட்டு பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், 4 மாவட்டங்கள் தவிர்த்து தனியார் பேருந்து சேவை 78 நாட்களுக்கு பிறகு நேற்று தொடங்கியது. பணிக்கு வந்த ஓட்டுநர்கள், நடத்துநர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, முகக் கவசம் வழங்கப்பட்டது. மேலும் பேருந்தில் கடைபிடிக்கவேண்டிய வழிமுறை குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

பேருந்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, 3 இருக்கைகள் இடத்தில் 2 பேரும்,2 இருக்கை உள்ள இடத்தில் ஒருவரும், கடைசி இருக்கையில் 3 பேரும் அமரும்படி குறியீடு அமைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளன செயலர் தர்மராஜ் கூறியதாவது:- தமிழகத்தில் மொத்தமுள்ள 4,600 பேருந்துகளில் 4,400 பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளது. முதல்நாளில், பயணிகள் கூட்டம் இல்லை. வரும்நாட்களில் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.