கை கழுவ கூட வசதியில்லாத 5 கோடி பேர்; வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி

இந்தியாவில் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் கை கழுவும் வசதி கூட இல்லாமல் உள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில் சிக்கும் அபாயம் உள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சோப் மற்றும் சுத்தமான தண்ணீர் வசதி கிடைக்காததால், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள், வளர்ந்த நாடுகளை விட கொரோனா தொற்றை பரப்ப அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் சுகாதார பார்வைகள் என்ற இதழில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகளில், சகாரா ஆப்பிரிக்கா மற்றும் ஓசினியாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு, முறையாக கைகழுவும் வசதி கிடைப்பதில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதில் கை கழுவுதல் முக்கிய பங்கு வகிக்கிறது. பல நாடுகளில் குறைந்த சுகாதார திறன் காரணமாக கைகழுவும் வசதி இன்றி இருப்பது கவலையளிக்கிறது.

சுமார் 46 நாடுகளில் சோப் மற்றும் சுத்தமான தண்ணீர் இன்றி 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவதிப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், நைஜீரியா, எத்தியோப்பியா, காங்கோ, இந்தோனேஷியா நாடுகளில் 5 கோடிக்கும் அதிகமானோருக்கு கைகழுவும் வசதி இல்லாத சூழல் உள்ளது.

தற்காலிக தீர்வாக சானிடைசர் அல்லது தண்ணீர் லாரிகளை பயன்படுத்தலாம். ஆனால் மோசமான கை கழுவுதல் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சம் உயிரிழப்புகளை தடுக்க நீண்ட கால தீர்வுகளை செயல்படுத்த வேண்டுமென ஆய்வாளரான பிரவுர் கூறியுள்ளார்.

உலக மக்கள்தொகையில் 25 சதவீதத்தினர் பயனுள்ள கை கழுவுதல் வசதிகளை கொண்டிருக்கவில்லை என்றாலும், 1990 மற்றும் 2019க்கு இடையில் பல நாடுகளில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.