சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் மேலும் 5 காவலர்கள் கைது

சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தந்தை - மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது.

அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 காவலர்கள என 5 பேரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தது. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சாத்தான்குளத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு 5 காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இதற்கிடையே சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வழக்கை சிபிஐ ஏற்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.