கோடை விடுமுறையை ஒட்டி 50 சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: 50 சிறப்பு ரயில்கள் இயக்கம்... கோடை விடுமுறையை முன்னிட்டு பயணியா் நெரிசலைக் குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே சாா்பில் 50 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கோடை கால விடுமுறையில் பயணிகளின் கூட்டத்தை குறைக்கும் வகையில் இந்திய ரயில்வே சாா்பில் கடந்த ஏப்ரல் முதல் ஜீன் வரை 380 சிறப்பு ரயில்கள் 6,369 நடைகள் இயக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டை விட 1,770 சேவைகள் கூடுதலாகும்.

இதில் தெற்கு ரயில்வேயில் மட்டும் தாம்பரம், சென்னை எழும்பூா், திருவனந்தபுரம், கொச்சுவேலியிலிருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு 50 சிறப்பு ரயில்கள் 244 முறை இயக்கப்படுகின்றன.

மேலும், மற்ற ரயில்வே மண்டலங்களிலிருந்து சென்னை, திருச்சி, கோவை, மதுரை, வேளாங்கண்ணி, மங்களூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு 37 சிறப்பு ரயில்கள் 526 முறை இயக்கப்படுகின்றன.

கோடை காலத்தில் மலைப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டி, குன்னூா் பகுதியில் இயக்கப்படும் நீலகிரி மலை ரயில் கடந்த ஏப்ரல் முதல் வார இறுதி நாள்களில் 3 முறை இயக்கப்படுகிறது. மேலும், பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.