கடலூர் மாவட்டத்தில் நிவாரண முகாம்களில் 50 ஆயிரம் பேர் தங்கவைப்பு

நிவாரண முகம்களில் 50 ஆயிரம் பேர்... நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக, கடலூர் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட நிவாரண முகாம்களில் 50 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

கடலூர் துறைமுகப் பகுதியில் புயல் முன்னெச்சரிக்கை10-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள மாவட்ட நிர்வாகம், குடிசை மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

அந்த வகையில், மாவட்டத்தில் 191 நிவாரண முகாம்களும், 42 புயல் பாதுகாப்பு மையங்களும் ஏற்படுத்தப்பட்டு, சுமார் 50 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடலோர கிராமங்களில் வசிப்போர் உடனடியாக அரசின் நிவாரண முகாம்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், நிவாரண முகாம்களில் தஞ்சமடைவோர் எண்ணிக்கை ஒரு லட்சம் வரை அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

இவர்களுக்கு வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் சமூக நலத்துறை ஆகிய துறைகளின் பணியாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, முகாம்களிலேயே உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முகாமிலும் இரு கிராம நிர்வாக அலுவலர்கள், சத்துணவு அமைப்பாளர், சமையலர், இரு சமையல் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் கொண்ட காவலர் குழுவும் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, 10 பேர் கொண்ட தூய்மைப் பணியாளர்களும் முகாம் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், நிவாரண முகாம்களுக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு ஊராட்சித் தலைவர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான நிதியை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தி, 3 நாட்களுக்குத் தேவையானவற்றை வாங்கி வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எக்காரணம் கொண்டும் நியாயவிலைக் கடையிலிருந்து அரிசி, பருப்பு போன்ற பருப்புகளை எடுத்துப் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் பேரிடர் காலங்களில் தூய்மைப் பணியாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் அரசு, தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துகொடுப்பதில்லை என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தங்களின் நிலையைக் கருதி அரசு மழை கோட் வாங்கித் தர வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தோரிடம், அரசின் செயல்பாடுகள் குறித்துக் கேட்டபோது, கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை விரைந்து செயல்பட்டுள்ளனர். தரமான உணவு உரிய நேரத்திற்கெல்லாம் கிடைத்துவிடுகிறது. மருத்துவப் பரிசோதனையெல்லாம் நடத்துகின்றனர். எங்களுக்கு மனநிறைவை அளித்துள்ளது எனத் தெரிவித்தனர்.