கொரோனாவால் உலக அளவில் 6 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்படுவர்; உலக வங்கி அச்சம்

கொரோனா தொற்று நோய் காரணமாக உலக அளவில் சுமார் 6 கோடி மக்கள் கடுமையான வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி அச்சம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. வளர்ந்து வரும் நாடுகள், ஏழ்மை நாடுகள் கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்நிலையில் கொரோனா தொற்று நோய் காரணமாக உலக அளவில் சுமார் 6 கோடி மக்கள் கடுமையான வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி அச்சம் தெரிவித்துள்ளது. இது குறித்து உலக வங்கி தலைவர் டேவிட் மால்போஸ் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மற்றும் வளர்ந்த பொருளாதாரங்கள் மூடப்படுவதால் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் கடும் வறுமையில் சிக்கி விடுவார்கள். சமீபத்திய காலங்களில் வறுமையை ஒழிப்பதில் நாம் செய்துள்ள முன்னேற்றத்தின் பெரும்பாலான பகுதி அகற்றப்படும்.

உலக வங்கி குழு விரிவான நடவடிக்கைகளை எடுத்து 100 நாடுகளுக்கு அவசர உதவி ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தை மற்ற நன்கொடையாளர்கள் முன் எடுத்து செல்லவும் அனுமதிக்கப்படுகிறார்கள். உலகளாவிய நெருக்கடியை சமாளிக்கும் ஒரு பகுதியாக 100 வளரும் நாடுகளுக்கு 160 பில்லியன் டாலர் மானியம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த 100 நாடுகளில் உலக அளவில் 90 சதவீத மக்கள் உள்ளனர். இவர்களில் 39 நாடுகள் ஆப்பிரிக்காவின் துணை சகாரா பகுதியை சேர்ந்தவை. வேலைகளுக்கு உதவ பணம் மற்றும் பிற உதவிகள் தனியார்துறை பராமரிக்கப்பட வேண்டும். சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சமூகம் ஆகியவற்றை திறம்பட சமாளிக்கும் வகையில் நாடுகளுக்கு ஏற்ப இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் சுகாதார அமைப்பை வலுப்படுத்தும். உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்க உதவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.