வாகனங்களுக்கான வரியை உயர்த்தும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது

சென்னை: வரி உயர்த்தும் மசோதா... தமிழகத்தின் இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் வரியை உயர்த்துவதற்கான மசோதா சட்டசபையில் நிறைவேறியது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தாக்கல் செய்த மசோதாவில், சரக்கு ஏற்றிய பிறகு 3 டன் எடை இருக்கக் கூடிய வாகனங்களுக்கு ஆண்டு வரியாக 3,600 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3 ஆயிரம் முதல் 5,500 கிலோ எடை வாகனங்களுக்கு காலாண்டு வரியாக 1,425 ரூபாய் முதல் 3,100 ரூபாய் வரை எடைக்கு ஏற்ப வரி உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாத புதிய மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரியாக அதன் விலையில் 10 சதவீதமும், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் என்றால் 12 சதவீதம் வரியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு வரி உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.