உண்ணாவிரதம் இருந்த ஆசிரியர் மயக்கமடைந்ததால் பரபரப்பு

சென்னை: சென்னையில் உண்ணாவிரதம் இருந்த ஆசிரியர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில், அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டத்தில் மூன்றாம் நாளாக ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2400 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துள்ள நிலையில், பணி வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், 2018 ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், மீண்டும் பணி நியமன போட்டித் தேர்வில் தகுதிபெற வேண்டும் என்று விதி கொண்டுவரப்பட்டது.

இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும் அரசு ஆசிரியர் பணி கிடைக்காததல் பலர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ஏற்கெனவே திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் நியமனத்தில் நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பை 57 வயதாக உயர்த்த வேண்டும்.

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களக்கு பணி வழங்க வேண்டும் என 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், சிலரின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இந்நிலையில் உண்ணாவிரம் இருந்த ஆசிரியர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில், அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் அங்கு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.