கொரோனா பரவலை தடுக்க பருத்தி துணியைக்கொண்டு தயாரிக்கும் முக கவசம் நல்லது

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க பல்வேறு நாடுகள் போராடி வருகின்றன. தடுப்பூசி ஒன்றுதான் நிரந்தர தீர்வாக உலக அளவில் பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது தடுப்பூசி கிடைக்க இன்னும் சில காலங்கள் ஆகும். இதனால் கொரோனாவை தடுத்து நிறுத்த முக கவசம், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல், கை சுத்தம் பராமரித்தல் போன்றவை பின்பற்றப்படுகிறது.

முக கவசம் அணிவதில் ஓரளவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றாலும் அனைவரும் அதிக விலை கொடுத்து முக கவசம் வாங்குவதில் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் எத்தகைய முக கவசம் கொரோனா வைரசிடம் இருந்து நம்மை காப்பதற்கு உதவும் என்பது பற்றி அமெரிக்காவில் புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர்.

இந்த ஆய்வில், 2 அடுக்கு மெல்லிய பருத்தி துணிகளை கொண்டு தயாரிக்கப்பட்டு, நன்கு பொருந்துகிற முகக்கவசங்கள் மட்டுமே கொரோனா வைரஸ் தடுப்பில் மிகுந்த பயனுள்ளவையாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. மேலும் கைக்குட்டையை மடித்து முகத்தில் கட்டிக்கொள்வது நீர்த்திவலைகளை தடுத்து நிறுத்துவதில் எந்த பங்களிப்பையும் செய்யாது என கண்டறியப்பட்டுள்ளது.

வீட்டிலேயே பல அடுக்கு பருத்தி துணிகளை கொண்டு தயாரித்து, நன்றாக முகத்தில் பொருந்தக்கூடிய முக கவசங்களே மிகவும் பலன் தரும் எனவும், தனி மனித இடைவெளியை பின்பற்றுவதும், முகத்தை மறைத்து கொள்ளுதலும், கை கழுவுதலும் தடுப்பூசி வருகிற வரையில் நாம் பின்பற்ற வேண்டியவை ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.