முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு சென்றால் ரூ.500 அபராதம்

டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தபடியே இருந்து கொண்டு வருகிறது. அதிலும், குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

மேலும் அதிலும் தற்போது சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகை தினங்கள் வர இருப்பதால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.இதை அடுத்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது மற்றும் பொது இடங்களுக்கு செல்லும் போது மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், டெல்லியிலும் சில நாட்களாகவே தொடர்ந்து கொரோனா பரவல் வீதம் அதிகரித்து வருவதால் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு சென்றால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உச்சநீதிமன்ற ஊழியர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வழக்கறிஞர்கள் விசாரணையின் போதும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.