பயணியின் உடல்நலக்குறைவால் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்

ஜார்ஜியா: புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்... ஜார்ஜியா நாட்டில் இருந்து ஸ்பெயினின் பார்சிலோனாவிற்கு சென்று கொண்டிருந்த விமானம் பயணி ஒருவருக்கு நடுவானில் ஏற்பட்ட வயிற்றுப்போக்கு காரணமாக மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.

டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் அட்லாண்டாவில் இருந்து புறப்பட்ட 2 மணி நேரத்தில் விமானி மீண்டும் அட்லாண்டாவில் உள்ள விமான கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

விமானத்தில் பயோ ஹசார்டு எனப்படும் உயிரி அபாயச் சூழல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்த விமானி, உடனடியாக ஊருக்குத் திரும்பி தரையிறங்க அனுமதி கோரினார்.

கட்டுப்பாட்டு மையமும் அனுமதி வழங்கியதன் பேரில் விமானம் மீண்டும் 2 மணி நேரம் பயணித்து அட்லாண்டாவுக்கு திரும்பியது.

பயோ ஹசார்டு சூழல் என்ன என்று விமானியிடம் விசாரித்த போது, பயணி ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும், அதனால் தாம் யூ டர்ன் அடித்து திரும்பி வந்ததாகவும் கூறியுள்ளார். பயணிகளிடம் மன்னிப்பு கோரிய டெல்டா விமான நிறுவனம், வேறு விமானத்தில் அவர்களை அனுப்பிவைத்தது.