குடும்பத்தினருக்காக தன் உயிரை தியாகம் செய்த நபர்

கனடா: குடும்பத்திற்காக உயிர் தியாகம்... கனடாவில் மனைவி, மகள் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோரின் உயிரை பாதுகாப்பதற்காக தன் உயிரை தியாகம் செய்த நபர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடா தேசிய தின நிகழ்வுகளின் போது இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் டொம் பேர்கன் என்ற நபர் உயிரிழந்தார். வாழ்ந்த போது எவ்வாறு சுயநலமற்று வாழ்ந்தாரோ அதேபோன்று மரணத்தின் போதும் பிற உயிர்களை காப்பாற்றி தன் உயிரை தியாகம் செய்து விட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் உருக்கமான குறிப்பிட்டுள்ளனர்.

வாகன விபத்தை தடுக்க முடியவில்லை என்ற போதிலும் வாகனத்தில் பயணித்த ஏனையவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு பேர்கன் நொடிப் பொழுதில் சமயோசிதமான தீர்மானம் எடுத்துள்ளார். வாகனத்தில் மனைவி, மகள் இருந்த பகுதி நோக்கி மோதவிருந்த வாகனத்தை உடனடியாக திருப்பி தனது பக்கத்தை மோதச் செய்து உயிரைத் தியாகம் செய்துள்ளார்.

சீமெந்து கற்கள் அடங்கிய ட்ரக் வண்டியொன்று பேர்கன் குடும்பம் பயணம் செய்த மினி வேன் மீது மோதுண்டுள்ளது. வேகமாக வாகனம் மோதுண்ட அதிர்ச்சியில் பேர்கன் உயிரிழந்துள்ளார். தன்னையும், அம்மாவையும், தனது மகளையும் நொடிப் பொழுதில் பாதுகாப்பதற்காக தன் உயிரை அப்பா தியாகம் செய்து விட்டார் என பேர்கனின் புதல்வி தெரிவிக்கின்றார்.

பேர்கன் உயிருடன் இருக்கும் போதும் சுயநலமற்று செயற்படுபவர் எனவும் இதனால் இந்த தியாகம் ஆச்சரியமான ஒன்றல்ல எனவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். ஒட்டாவாவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.