பெண்ணின் சிறுநீரகங்கள் திருடப்பட்ட சம்பவத்தால் பீகாரில் பெரும் பரபரப்பு

பீகார்: பெண் சிறுநீரகங்கள் திருட்டு... பீகார் மாநிலத்தில் பெண்ணின் சிறுநீரகங்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள முசாஃபர் பகுதியில் சுனிதா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட கருப்பை பிரச்சினைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவகை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனையடுத்து சுனிதா தேவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அந்த அறுவை சிகிச்சையை செய்த மருத்துவர் சுனிதா தேவியின் 2 சிறுநீரகங்களையும் திருடியுள்ளார். இதனையடுத்து சுனிதா தேவிக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இந்நிலையில் வேறு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது சிறுநீரகங்கள் திருடப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் அந்த மருத்துவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து சுனிதா தேவி கூறியதாவது. உடனடியாக மோசடியில் ஈடுபட்ட மருத்துவரை கைது செய்யப்பட்டு அவரது 2 சிறுநீரகங்களும் அகற்றப்பட்டு எனக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்படி செய்தால் மட்டுமே நான் உயிர் பிழைக்க முடியும். மேலும் இனிவரும் காலங்களில் இது போன்று மோசடிகளில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும். நான் ஏழை என்பதால் எனது பிரச்சனையை மாநில அரசு கவனிக்கவில்லை ஒரு நாள் விட்டு ஒரு நாள் டயாலிசிஸ் செய்தால் மட்டுமே நான் உயிரோடு இருக்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.