காயமடைந்த வெள்ளையினத்தவரை தோளில் சுமந்து பாதுகாப்பாக தூக்கி சென்ற கறுப்பின இளைஞர்

பாராட்டுக்களை குவிக்கும் கறுப்பின இளைஞர்...லண்டனில் கறுப்பின மக்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த தீவிர வலதுசாரி ஆதரவாளரான வெள்ளையரை கறுப்பின இளைஞர் ஒருவர் பாதுகாப்பாக தூக்கி செல்லும் காட்சி பதிவான புகைப்படம் தற்போது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்களின் உண்மையான காரணம் எதுவென இந்த ஒற்றைப் புகைப்படம் உணர்த்துவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். திடகாத்திரமான ஒரு கறுப்பின இளைஞன், முகக்கவசம் அணிந்து கொண்டு, காயத்துடன் ரத்தம் சொட்டும் ஒரு வெள்ளையரை தனது தோளில் சுமந்தபடி, பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறும் காட்சியே புகைப்படமாக வெளியானது.

கறுப்பின ஆதரவு ஆர்ப்பாட்டமானது தற்போது லண்டனில் இனவெறியை தூண்டிய தலைவர்களின் நினைவுச்சின்னங்களை அகற்றும் போராட்டமாக வெடித்துள்ளது. இந்த போராட்டத்தில் தீவிர வலதுசாரி வெள்ளையர்கள் நினைவுச்சின்னங்களை காக்கும் பொருட்டு களமிறங்கியுள்ளனர்.
அவ்வாறாக களமிறங்கிய ஒரு வெள்ளையரே போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு, ரத்தம் சொட்ட கறுப்பின இளைஞர் ஒருவரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
வெள்ளையரை காப்பாற்றிய அந்த கறுப்பின நபரின் பெயர் பட்ரிக் ஹட்சின்சன் என தெரியவந்துள்ளது. உள்ளூர் பத்திரிகை செய்திகளின்படி, நினைவுச்சின்ன பாதுகாவலர்கள் கறுப்பின ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் முடிந்தபின்னர் பொலிஸ் மற்றும் இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோதல்களைத் தூண்டினர், தொடர்ந்து அது வன்முறையாக வெடித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை நடந்த அந்த சம்பவத்தை குறிப்பிட்டு, புகைப்படத்தையும் வெளியிட்டு, இன்று ஒரு உயிரை காப்பாற்றியுள்ளோம். இது வெள்ளையர்களுக்கு எதிரான கறுப்பின மக்களின் போராட்டமல்ல, மாறாக இனவெறிக்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டம் என ஹட்சின்சன் குறிப்பிட்டுள்ளார்.