ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி



விழுப்புரம் விக்கிரவாண்டி போலீஸ் சரகம் கிராமத்தை சேர்ந்த மணிவேல்(வயது 22) மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நிவர் புயல் காரணமாக அந்த பகுதியில் பெய்த பலத்த மழையினால் பம்பை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை மணிவேல் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றுக்கு குளிக்க சென்றார். ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததால் அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் ஆற்றில் இறங்கி மணிவேலை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

உடனே இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசாருக்கும், விழுப்புரம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் தீயணைப்புபடை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணிவேலை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேரம் தேடியும் மணிவேலை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடுதல்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 2-வது நாளாக இன்று காலை மணிவேலை தேடும் பணியில் தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபட்டனர்.

அப்போது வி.மாத்தூர் பம்பையாற்று தடுப்பணை அருகே இறந்த நிலையில் மணிவேலின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.