இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 1,200 கிலோ மஞ்சள் தூத்துக்குடியில் பறிமுதல்

தமிழக மஞ்சளுக்கு சமீபகாலமாக இலங்கையில் கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மஞ்சளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள ஒரு லாரி செட்டில் மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சிப்காட் போலீசார் சோரீஸ்புரம் ரோட்டில் உள்ள ஒரு லாரி புக்கிங் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள அறையில் 24 மூட்டைகளில் மொத்தம் சுமார் 1,200 கிலோ மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. உடனடியாக போலீசார் அந்த மஞ்சள் மூட்டைகளை பறிமுதல் செய்து தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் அந்த மஞ்சள் மூட்டைகளை அதே அறையில் வைத்து பூட்டி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். மேலும் இலங்கைக்கு கடத்துவதற்காக மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.