மின்கம்பம் மாற்றும் பணியின் போது கல்லூரி மாணவருக்கு நேர்ந்த அவலம்

மதுரை: கல்லூரி மாணவர் கால் சிதைந்தது... மதுரையில், பழுதான மின்கம்பத்தை மாற்றிக் கொண்டிருந்த போது அவ்வழியாக நடந்துச் சென்ற கல்லூரி மாணவனின் மீது விழுந்ததில் கால் சிதைந்தது.

கோச்சடை பகுதியைச் சேர்ந்த பரிதி விக்னேஸ்வரன், கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருவதோடு, தேசிய ஜூடோ வீரராகவும் உள்ளார்.

பக்கத்து தெருவிலுள்ள நண்பனை பார்ப்பதற்காக பரிதி நடந்து செல்லும் வழியில் மின்கம்பத்தை மாற்றும் பணியில் மின்வாரியத்தினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிரேனின் இரும்பு கயிறு அறுந்ததால் மேலே தூக்கப்பட்ட மின்கம்பம் பரிதியின் இடது காலில் விழுந்தது. இதில், அவரது கணுக்கால் பகுதி முழுமையாக நொறுங்கியதால் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாமல் பணியில் ஈடுபட்ட மின்சார வாரியத்தினரால் மாணவரின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் மற்றும் கிரேன் ஆபரேட்டர் மீது எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.