கொரோனா பரவல் அதிகரித்தால் பள்ளி, கல்லூரி மாணவர்களில் தகுதியானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

தமிழகம்: தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டது. இந்த அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதனால் கட்டுப்பாடுகளும் மெல்ல தளர்வுகளும் அளிக்கப்பட்டு வந்து உள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் பல நாட்கள் தொடர்ச்சியாக வைரஸ் பாதிப்பு 100க்கும் கீழ் பதிவாகி வந்தது.

இதனால் மக்கள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வந்தனர். இந்தச் சூழலில் திரும்பவும் மெல்ல வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது அடுத்த அலையின் தொடக்கமாக இருக்குமோ என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். மாநிலத்தில் நேற்று முன் தினம் 476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 13ம் தேதி தான் 2022 – 2023 கல்வி ஆண்டிற்கான பள்ளி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது, பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களில் தகுதியானவர்களுக்கு 100% கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மேலும் மாணவர்கள் மாஸ்க் அணிதல் மற்றும் தனிநபர் இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றுவதை கல்வி நிறுவனங்கள் கண்காணிக்க வேண்டும். மேலும் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதையடுத்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

நோய் பரவலுக்கு வழிவகை செய்யாமல் பள்ளி கல்லூரி வளாகங்கள் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நாள்தோறும் வெப்பமானி மூலம் காய்ச்சல் உள்ளதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.