மாலை நேரத்தில் சிறுதானிய சிற்றுண்டி வழங்க நடவடிக்கை

புதுச்சேரி: கல்வியமைச்சர் தகவல்... பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்தது போன்று பள்ளிகளில் மாலை நேரத்தில் சிறுதானிய சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது என்று புதுச்சேரி கல்வியமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்ததாவது: “புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால், வரும் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படவிருந்த அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் வரும் ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

அதேபோல் சி.பி.எஸ்.இ கல்வி பாடத்திட்டம் இந்த கல்வியாண்டில் 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு அமல்படுத்தப்படுகிறது.

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அமல்படுத்துவதால் அதன் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறந்தவுடனே சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கான நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும். அதற்காக அனைத்து பள்ளிகளிலும் தயார் நிலையில் உள்ளன.

பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்தது போன்று பள்ளிகளில் மாலை நேரத்தில் சிறுதானிய சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து குழு அமைத்து விசாரிக்கப்படும்.

கல்வித் துறையோடு இருந்த விளையாட்டுத் துறையை பிரித்து விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை என்ற புதிய துறை ஏற்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.