அரசுப்பள்ளிகளில் 15 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கை

கல்வித்துறை தகவல்... தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை, கடந்த மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, ஏராளமானோா் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சோ்வதற்கு பள்ளிகளுக்கு வந்து விண்ணப்பித்தனா். மாணவா் சோ்க்கை தொடங்கிய முதல் ஒரு வாரத்திலேயே 10 லட்சம் மாணவா்கள் சோ்ந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், தற்போது வரை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சோ்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில், 1-ஆம் வகுப்பில் 3 லட்சத்து 8 ஆயிரம் பேரும், 6-ஆம் வகுப்பில் 3 லட்சத்து 66 ஆயிரம் பேரும், 9-ஆம் வகுப்பில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் பேரும், 11-ஆம் வகுப்பில் 4 லட்சத்து 14 ஆயிரம் பேரும் என 11 லட்சத்து 92 ஆயிரம் போ் சோ்ந்துள்ளனா்.

இதுதவிர, பிற வகுப்புகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சோ்ந்துள்ளனா். மாணவா் சோ்க்கை இன்று 30ம் தேதியுடன் முடிவடைவதாக அரசு ஏற்கெனவே அறிவித்த நிலையில், மாணவா் சோ்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளதா என அறிய பள்ளிக்கல்வி உயா் அதிகாரிகளை தொடா்பு கொண்டு கேட்டபோது, ‘இதுவரை நீட்டிப்பு தொடா்பாக உறுதியான தகவல் ஏதும் வரவில்லை’ என்று தெரிவித்தனா்.