ஆறு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 35.38 அடியாக சரிவு


மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூர்அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணை நீர்மட்டம் 103 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 867 கனஅடியாகவுமிருந்தது. விநாடிக்கு 10 ஆயிரம்கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 3,122 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 1,560 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 6,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணை நீர்மட்டம் 35.38 அடி, இருப்பு 9.83 டிஎம்சி.இந்த நிலையில், கர்நாடக அணைகளிலிருந்து 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டுமென காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து கொண்டு வருகிறது.


தற்போது, கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ் அணைக்கு 11,800, கபினிக்கு 5,481 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தமிழகத்துக்கு விநாடிக்கு 2,592 கனஅடிநீர் மட்டுமே திறந்துவிடப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்ந்த நிலையில், தற்போது நீர்வரத்து குறைவாகவும், நீர் திறப்பு அதிகமாகவும் இருப்பதால் அணையின் நீர்மட்டம் சரிந்து கொண்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2017 ஜனவரி 24-ம் தேதி 35.01 அடியாக இருந்தது. இதனை அடுத்து 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அணை நீர்மட்டம் 35.38 அடியாக சரிந்துள்ளது.