தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு பின் ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் அடித்தட்டு மக்கள் மிகவும் பாதிப்பை சந்தித்தனர். இந்தியாவில் தற்போது 4-வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆட்டோக்கள் ஓட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அவர்கள் தாங்களும் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர். இதனை ஏற்று ஆட்டோக்களை சில நிபந்தனைகளுடன் இயக்க அரசு அனுமதி வழங்கியது.

அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று ஆட்டோக்கள் ஓடத் தொடங்கின. ஆட்டோவில் ஓரிரு பயணி மட்டுமே ஏற்றிச் செல்லலாம் என்ற உத்தரவு வேதனை அளித்தாலும் சுமார் 2 மாதங்களுக்கு பிறகு ஆட்டோவை இயக்குவதில் அதன் ஓட்டுனர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கத் தொடங்கின. இதனால் காலையிலேயே ஆட்டோ ஸ்டாண்டுகள் களைகட்டத் தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசின் அறிவிப்புக்கு முன்பே, ஒரு சில ஆட்டோக்கள் ஓடிக் கொண்டிருந்தன. தற்போது அரசு அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் ஆட்டோக்கள் ஓடின.

சிவகங்கை மாவட்டத்திலும் இன்று காலை முதல் ஆட்டோக்கள் ஓடத் தொடங்கின. பலரும் ஆர்வத்துடன் இதில் பயணித்தனர். மதுரை மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளன. இதில் புறநகர் பகுதிகளில் ஒரு சில ஆட்டோக்கள் ஏற்கனவே இயங்கி வந்தன. தற்போது அரசின் உத்தரவைத் தொடர்ந்து நகர்ப் பகுதியிலும் ஆட்டோக்கள் ஓடின.

ஒரு பயணி மட்டுமே செல்ல வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கணவன்-மனைவி, குழந்தைகள் என்று எப்படி தனித்தனி ஆட்டோவில் பயணம் செய்வார்கள். எனவே ஆட்டோ பயணத்தில் 3 பேர் பயணம் செய்ய அனுமதி வழங்கினால் தான் எங்களுக்கு வருமானம் கிடைக்கும் எனவும் கூறியுள்ளனர்.