அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்து தெரிவிப்பு

சென்னை: தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமானஎடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் 9-ஆவது நாளில் ஆயுத பூஜையையும், 10-வது நாளில் விஜயதசமியையும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்ற அவரவரது தொழில் வளம் பெருகிட, மக்கள் அன்னையின் அருள் வேண்டி, தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற தொழிற் கருவிகளையும், இயந்திரங்களையும் தூய்மைப்படுத்தி, சந்தனம், குங்குமம் இட்டு அவற்றை இறை பொருளாகக் கருதி வழிபடும் நன்னாள் ஆயுத பூஜை திருநாள் ஆகும்.

இதையடுத்து நவம் என்றால் ஒன்பது. நவராத்திரி நாட்களில் முதல் 3 நாட்கள் வெற்றி வேண்டி துர்கா தேவியையும்; அடுத்த மூன்று நாட்கள் செல்வம் வேண்டி மகாலட்சுமியையும், கடைசி 3 நாட்கள் கல்வி வேண்டி சரஸ்வதி தேவியையும் மக்கள் வழிபடுவார்கள். மகிஷாசுரனை தேவியானவள் 9 நாட்கள் போரிட்டு வெற்றி வாகை சூடிய நாளே விஜயதசமி, விஜயதசமி அன்று தொடங்கும் அனைத்து தொழில்களும், செயல்களும் தெய்வ சக்தியின் அருளால் வெற்றியடையும் என்பது நமது நம்பிக்கை.

மேலும் 'செய்யும் தொழிலே தெய்வம்' என்பதையும்; 'உழைப்பின் மூலமே வெற்றி' என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் மக்கள் அனைவரது வாழ்விலும் அனைத்து செல்வங்களும் தழைத்தோங்க வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து, அன்பார்ந்த தமிழக மக்கள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.