காற்று மாசு தரம் தொடர்ந்து அபாய கட்டத்தில் இருக்கும் டெல்லி


புதுடெல்லி: அமைச்சர் அதிஷி தனது எக்ஸ் பக்கத்தில், டெல்லியில் காற்று மாசு தரம் தொடர்ந்து அபாய கட்டத்தில் இருப்பதால் டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் நவ.10 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 6-12 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறும் விருப்பம் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகள் நவ.2 ஆம் தேதி வரை மூடுவதற்கு டெல்லி அரசு உத்தரவிட்டிருந்தது. டெல்லி மாநகராட்சி அதன் உத்தரவு ஒன்றில், நவ.3,4 ஆகிய தேதிகளில் நர்சரி முதல் 5 வரையுள்ள வகுப்புகளை ஆன்லைனில் நடத்த ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டது.

இதற்கு இடையே தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் கடுமையானதாக மாறியது. அதனைத் தொடர்ந்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே நீடித்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி நிலவரப்படி டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரம் 460 என்ற மோசமான நிலையிலேயே இருந்தது. சனிக்கிழமை டெல்லியின் சராசரி காற்றின் தரம் 415 ஆக இருந்தது. டெல்லியின் அண்டை நகரங்களான நொய்டா, குருகிராம, தேசிய தலைநகர் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை காற்றின் தரம் மோசமாக இருந்தது.

இந்நிலையில் டெல்லியின் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கோபல் ராய் ஞாயிற்றுக்கிழமை அளித்த ஊடகப் பேட்டியில், இச்சூழ்நிலையில் அரசு கட்டுமானப் பணிகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் வாகனங்களை டெல்லிக்குள் தடை செய்வது, பிஎஸ்3 பெட்ரோல் பிஎஸ்4 டீசல் வாகங்களுக்கான தடையை அமல்படுத்துவது, குப்பைகள் மற்றும் பயோமாஸ்களை எரிப்பது போன்றவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

மேலும் பொதுமக்கள் தனிப்பட்ட முறையில் வாகனங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்து பொதுப் போக்குவரத்தினை பயன்படுத்த வேண்டும். ஜிஆர்ஏபி விதிகளை தேசிய தலைநகர் பகுதிகளில் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என நாங்கள் மத்திய அரசிடம் சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளோம்.உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியாணாவில் பாஜக அரசே ஆட்சியில் இருப்பதால் மத்திய அரசுடன் இணைந்து இந்த விதிகளை டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் தீவிரமாக அமல்படுத்த முடியும் என்று நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இதையடுத்து டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதால் மத்திய அரசு, ஐிஆர்ஏபி-யின் கீழ் 3-வது நிலை கட்டுப்பாட்டை ஏற்கெனவே அமல்படுத்தியுள்ளது. எனவே இதன்படி மாசுபாட்டினைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடு உள்ளன. அதில், அவசியமற்ற கட்டுமானப்பணிகள், சுரங்கம் மற்றும் கல்லுடைத்தல் போன்ற பணிகளுக்கானத் தடை, டெல்லி, காசியாபாத், கவுதம் புத்தா நகர், குருக்ராம் மற்றும் ஃபரிதாபாத் போன்ற பகுதிகளில் , பிஎஸ் 3 பெட்ரோல் பிஎஸ் 4 டீசல் நான்கு சக்கர வாகனங்களை இயக்கத் தடை போன்ற கட்டுப்பாடுகள் அடங்கும்.

டெல்லி மாநகராட்சியும் சுற்றுச்சூழல் மாசுபாட்டினைக் கட்டுப்படுத்த, ஜிபிஆர்எஸ் கண்காணிப்புடன் கூடிய மெக்கானிக்கல் ரோடு ஸ்வீப்பர்களை 2 ஷிப்ட்களுக்கு பயன்படுத்துவது, சாலைகளில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு 18,000 தண்ணீர் லாரிகளை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .