பயங்கரவாதச் செயல்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் அலெக்ஸிக்கு மேலும் 19 ஆண்டுகள் சிறை

மாஸ்கோ: பயங்கரவாதச் செயல்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் அலெக்ஸி நவால்னிக்கு மேலும் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அவரது அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு இவரை கொலை செய்யும் நோக்கில் விமான நிலையத்தில் அவர் குடித்த டீயில் நோவிசோக் என்ற ரசாயன நஞ்சு கலந்து கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சதிப்புரட்சியின் பின்னணியில் அதிபர் புதினின் அரசு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்தன. இதைத்தொடர்ந்து ரஷ்ய அரசின் மூத்த அதிகாரிகள் மீது அமெரிக்க அரசு பொருளாதார தடைகளை விதித்தது.

இதனிடையே இரசாயன தாக்குதலுக்கு உள்ளான நவால்னி, ஜெர்மனியில் சிகிச்சை பெற்று ரஷ்யா திரும்பியபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் பழைய பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ரஷ்ய நீதிமன்றம் அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

நவால்னி மீது மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நவால்னி மாஸ்கோவின் கிழக்கே சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, பயங்கரவாதச் செயல்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் அலெக்ஸி நவால்னிக்கு மேலும் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.