அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானம்

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானம்... சட்டத்துறை ஆசிரியர்களை சட்டத்தரணியாக சேவையாற்ற அனுமதிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுப்பதென அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

சட்டத்துறை ஆசிரியர்களாகப் பணியாற்றும் சட்டத்தரணிகள் தமது தனிப்பட்ட சேவையை (Private Practice) செய்வதற்கு ஒழுங்குபடுத்தப்பட்ட அனுமதியை வழங்கும் வகையில் சுற்றறிக்கை சீராக்கம் செய்யப்பட வேண்டுமென பரிந்துரைக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் நேரலை காணொளி தொழில்நுட்பத்தின் (Zoom) ஊடாக கலந்துரையாடினர். இதன்போது, சட்டத்துறை ஆசிரியர்கள் தமது தனிப்பட்ட சேவையை செய்வதற்கு பல்கலைக்கழக மானியங்கள் விதித்த தடைக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் விரைவில் சந்திப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சட்டத்துறையில் பணியாற்றும் சட்டத்தரணிகள் நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்குத் தடைவிதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை ஒன்றை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டிருந்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், சட்டத்தரணியாக தனது தனிப்பட்ட சேவையை வழங்க தடைவிதிக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இந்த சுற்றறிக்கைக்கு எதிராகவும், தான் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை எடுத்த தீர்மானத்துக்கு எதிராகவும் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.