யார் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க இ-பாஸ் அவசியம்...முதல்வர் தகவல்

கடலூரில் கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் பற்றி ஆலோசித்த பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் அதிகளவு கொரோனா பரிசோதனைகள் செய்வதன் காரணமாக தொற்று கட்டுக்குள் உள்ளது. உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் கொரோனாவுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம்.

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்திற்கும் அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றுள்ளன. கடலூரில் கொரோனா தடுப்புக்காக 39 நடமாடும் மருத்துவக்குழுக்கள் செயல்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம் மூலம் 9,965 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கடலூரில் மட்டும் 3 ஆண்டுகளில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1,114 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில்தான் அதிகளவு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும் விதமாகவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் குறைந்தபின் நீட் தேர்வு நடத்துமாறு பிரதமருக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன். யார் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை இ-பாஸ் முறை இருந்தால்தானே கண்டறிய முடியும் என்று அவர் கூறினார்.