கர்நாடகாவில் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

கர்நாடகா: லிப்லாக் சேலஞ்ச்... கர்நாடக மாநிலம் மங்களூரில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் லிப்லாக் சேலஞ்சில் ஈடுபட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனியார் பிளாட் ஒன்றில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள், தங்களின் நெருங்கிய தோழிகளை அங்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அவர்களுடன் Truth or Dare கேம் விளையாடி, அதன் மூலம் லிப்லாக் சேலஞ்சில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி மாணவர்களுடன் பள்ளி மாணவ, மாணவிகளும் சேர்ந்து இந்த சேலஞ்சில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது தொடர்பான ஒரு வீடியோவை பள்ளி மாணவர் ஒருவர் வாட்ஸ்அப்பில் பதிவு செய்ய, அந்த வீடியோ தீயாக பரவியுள்ளது.

பெற்றோர் மற்றும் ஆசியர்கள் கவனத்துக்கும் இந்த வீடியோ எட்டி அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உடனே நடவடிக்கை எடுத்த பள்ளி நிர்வாகம், சம்மந்தப்பட்ட மாணவர்களை உடனடியாக பள்ளியில் இருந்து இடை நீக்கம் செய்துள்ளது. காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உடனடியாக விசாரணையில் இறங்கிய காவல்துறைக்கு அதிர்ச்சிகரமான பல உண்மைகள் கிடைத்துள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவத்தில், மாணவர்கள் தனியார் பிளாட் ஒன்றை வாடகைக்கு எடுத்து லிப்லாப் சேலஞ்சை நடத்தியதை கண்டுபிடித்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் அவர்கள் அந்த பிளாட்டுக்கு வாடகைக்கு சென்றுள்ளனர். பதிவு செய்யப்பட்ட வீடியோவில், மாணவரும், மாணவியும் லிப்லாக்கில் ஈடுபடுகின்றனர். அருகில் இருப்பவர்கள் எல்லாம் அவர்களை உற்சாகப்படுத்துகின்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, 8 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்தினார்களா? என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.


ஒரு மாணவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்னொரு மாணவர் வெளிநாடு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. புகார் பதிவு செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு 17 வயதாகிறது. இவர்கள் அனைவரும் 2 மாணவிகளை பல்வேறு நேரங்களில் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கல்லூரி மற்றும் பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள் பெற்றோர்களுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் லிப்லாக் சேலஞ்சில் ஈடுபட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.