அரசு ஊழியர் இருக்கையில் அமர்ந்து கணக்கு பார்த்த சம்பந்தமே இல்லாத நபர்

கரூர்: கரூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சம்பந்தமில்லாத நபர் அத்துமீறி அரசு ஊழியர் இருக்கையில் அமர்ந்து கணக்கு வழக்குகளை கண்காணித்த சர்ச்சைக்குரிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தரகம்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது. கடவூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுகவைச் சேர்ந்த செல்வராஜ் பதவியில் இருந்து வருகிறார். இவருடைய ஆதரவாளர்கள் சிலர் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒப்பந்ததாரர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சிறு சிறு பணிகள் நடந்து வருகிறது. இதில் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் ஒப்பந்ததாரர்களிடம் பணியாற்றும் நபர் ஒருவர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் ஆகியவற்றிற்கு நிதி பங்களிப்பு வழங்கும் கணினி அறையின் அரசு ஊழியர் அமரும் இருக்கையில், அலுவலகப் பணிக்கு சம்பந்தமில்லாத நபர் ஒருவர் அமர்ந்து அலுவலக கணக்கு வழக்குகளை கண்காணிக்கும் சர்ச்சைக்குரிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இந்த வீடியோவில் அந்த நபர் அரசு ஊழியர் இருக்கையில் அமர்ந்து அலுவலக கணக்குகளை கண்காணிப்பதும், அவரிடம் சில அரசு ஊழியர்கள் நின்று கொண்டே 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பள கணக்குகள் குறித்து உரையாடும் நிகழ்வு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.